நச்சு உணவு - சுகாதாரமற்ற பாக்கெட் மாவு மற்றும் நாட்பட்ட தோசை மாவு

2 comments
தோசை மாவு ரூபத்தில் ஓர் கலியுக அரக்கன்!

         நண்பர் ஒருவர் சமீபத்தில் தொடர்பு கொண்டு அவரின் இரத்த அழுத்தம் திடீரென அதிகரித்து, அவதிப்படுவதாகவும் என்ன காரணம் எனத் தெரியவில்லை என சற்றே இயல்புக்கு மாறான பதட்ட குரலில் பேசினார், சர்க்கரை பாதிப்பு மருந்து சாப்பிட்டு வரும் அவரை முதலில், ஒரு சிறு மருந்தை சாப்பிடச்சொல்லி விட்டு, இரவு என்ன சாப்பிட்டீர்கள் எனக் கேட்டோம்! தோசை சாப்பிட்டதாகக்கூறிய அவர், இரவு பெரும்பாலும் தோசை அல்லது இட்லி தான் சாப்பிடுவதாகவும் மேலும் வீட்டில் அரைத்த மாவு தான் நாங்கள் வெளியில் வாங்குவதில்லை, எனவே அதில் என்ன பிரச்னை எனவும் கேட்டார், நாம், பிரச்னை ஒன்றும் இல்லை, உங்கள் மனைவியிடம் ஒரு நிமிடம் போனைக் கொடுங்கள் என்றோம், நண்பர் மனைவியும், வீட்டில் அரைத்த மாவுதான் நேற்றும் இந்த மாவில் தான் தோசை ஊற்றிக்கொடுத்தேன் என்றார்கள்,

      எத்தனை நாட்களாக இந்த மாவைப்பயன்படுத்துகிறீர்கள் என்றதற்கு, என்ன ஒரு 6 அல்லது 7 நாட்கள் இருக்கும், பையன்  ஹாஸ்டலில் இருக்கிறான், நாங்கள் மட்டும் தானே, அதனால் ஒரு வாரம் தாராளமாக வரும் என்று இயல்பாகக்கூறிவிட்டு அவரின் சிக்கன நடவடிக்கையை நான் வெகுவாகப் பாராட்டுவேன், என எதிர்பார்த்தோ என்னவோ வேறு எதுவும் பேசாமல் இணைப்பில் காத்திருந்தார்கள், நாம் உடனே, அம்மா, உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் ஏதாவது மனத்தாங்கலா? ஏன் அவரை ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்லப்பார்க்கிறீர்கள் எனக் கேட்டோம்.அந்தப்பெண்மணி எம்மை நன்கு அறிந்தவர், எமது கேள்வியைக் கேட்டதும், சிறிது நேரம் பதிலே இல்லை, நிச்சயம் இந்த பதிலல்ல அவர் எதிர்பார்த்தது.

    அவருடைய அதிர்ச்சியை சற்று நேர நிசப்தத்திற்கு பிறகு நாமே, கலைத்தோம், என்ன பதிலே இல்லை, சொல்லுங்கள் எனக்கேட்க, அவர் போனிலே அழ ஆரம்பித்து விட்டார், என்ன இப்படி ஏதேதோ பேசுகிறீர்கள் , நானே அவருக்கு பிரசர் அதிகரித்து அவதிப்படுகிறார் எனக் கவலையில் இருக்கிறேன் , நீங்கள் இப்படி பேசுகிறீர்களே என் அழுகையுடனே கேட்டார்.

    அம்மா, எந்தப்பெண்ணும் அவ்வாறு செய்யமாட்டார்கள் , யாமும் அறிவோம், உங்கள் மனதைப் புண்படுத்தும் எண்ணம் எமக்கு இல்லை,ஆனாலும் உங்கள் அறியாமையால்,நீங்கள் ஒரு வார மாவை சிக்கனம் என இன்னும் பயன்படுத்தி வருகிறீர்களே, அந்த மாவில் உருவாகியிருந்த நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் [ இந்த மாதிரி பாக்டீரியாக்கள் எவற்றில் அதிகம் இருக்கும் என அப்போது நாம் சொல்ல வில்லை ] தான் பல்வேறு உடல் உபாதைகளை அளிக்கும், அதன் காரணமாக வந்தது தான் தங்கள் கணவரின் அதிக இரத்த அழுத்த பாதிப்பு, என்றோம். ஒரு வாரம் கடந்த மாவு விஷம் தானே, இப்போது சொல்லுங்கள் என்றோம்.

    அவர் ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு போனை அவர் கணவரிடம் கொடுத்தார் , நமக்கு அவர் என்ன செய்யப்போகிறார் எனத்தெரியும், நண்பர், என்ன சொன்னீர்கள் என் மனைவி தோசை மாவை எடுத்து கொட்டுகிறாள் என்றார், நாம் சிரித்துக்கொண்டே, விஷத்தை யாராவது வீட்டில் , அதுவும் குளிர் சாதனப்பெட்டியில் வைத்துக்கொள்வார்களா? அது தான் உங்கள் மனைவி அவற்றை அழிக்கிறார் என்று, காரணத்தை விளக்கினோம், நண்பர் அதிர்ந்து போனார், இன்னும் தகவல் இருக்கிறது நாளைய பதிவில் அறிந்துகொள்ளுங்கள் என்றோம்.

       மேலும் சர்க்கரை பாதிப்பில் இருப்பவர்கள்,மருந்து உட்கொள்பவர்கள்  வீட்டில் அரைத்தச் சுகாதாரமான மாவாக இருந்தாலும், அவசியம் இட்லி தோசை வகைகளைத் தவிர்க்க வேண்டும், தோசை தான் சாப்பிடுவேன் என்றால்,கோதுமை மாவிலோ,அல்லது கேழ்வரகு உள்ளிட்ட நவதானிய வகைகளிலோ, தோசையோ அடையோ செய்து, சாப்பிடக்கொடுக்கலாம்.

   இன்றைய சம்பவம் நடந்திருக்காவிட்டால், அவர் மனைவி இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மாவைப் பயன்படுத்தியிருப்பார் என எண்ணி படித்த அவர்களின் அறியாமைக்கு வருந்தினோம்.

       இது போன்ற அன்றாடப் பயன்பாட்டில்  விழிப்புணர்வு மிக அவசியம் அதோடு மட்டுமல்லாமல் கடைகளில் இன்று சர்வ சாதாரணமாக பாக்கெட்டில் விற்கப்படும் தோசை மாவில் உள்ள கெடுதல்களைப்பற்றி இனி பார்க்கலாம்.

  சாதாரணமாக வீட்டில் அரைத்து உபயோகப்படுத்தும் மாவில் ஒரு கெடுதலுமில்லை, ஆயினும், அதிக நாட்கள் வைத்திருந்து உபயோகப்படுத்தினால், ஆரம்பத்தில் விவரித்தபடி மாவும் கெட்டு, நமக்கும் கெடுதலைத்தரும். 

  இன்றைய அவசர உலகத்தில், பெரும்பாலோனோருக்கு, இட்லி மாவு அரைக்கக்கூட நேரம் கிடைப்பதில்லை, இத்தனைக்கும் இன்று மின்சார ஆட்டுக்கல் தான் , நேரத்தை மிச்சப்படுத்தவோ அல்லது பணத்தை சேமிக்கவோ , அவர்கள் இன்று கடைகளில் விற்கப்படும் இன்ஸ்டண்ட் இட்லி மாவையே அதிகம் உபயோகிக்கின்றனர்.

         பெரும்பாலான இந்த வகை மாவுகளால் தான் , மக்கள் தமது வியாதியைத் தாமே, தேடிக்கொள்கின்றனர்,ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்திற்கு கொடுத்த விலை அது!

அறிந்துகொள்வோம்!

1. இயற்கையான மாவில் 2 நாளில் வரும் புளிப்பு வாசனை, இதில் கண்டிப்பாக வரவே வராது, ஏனெனில் மாவில் கலக்கப்படும் எத்தனை நாட்களானாலும் புளிக்கும் தன்மையை உண்டுபண்ணாத, உடல் புண்ணுக்கு வெளிமருந்தாகவும் கேரம் போர்டு பவுடராகவும் உபயோகப்படுத்தும் கெமிக்கல் மருந்து போரிக் ஆசிட் பவுடரும் மற்றும் ஆரோட் மாவே இதற்குக் காரணம், இத்துடன் மாவையும் பொங்க வைத்து அதன் நிறையையும் அதிகரிப்பதால் , இது மனிதர்க்கு செய்யும் பாதிப்பை உணராமல் , மாவை வாங்குபவரும் சக மனிதரே, என்பதை மறந்து சிலர் மாவில் இத்தகைய  நஞ்சை கலக்கின்றனர்.இதே போல சில உணவகங்களில் , சாதத்தில் , சுண்ணாம்பு கலக்கின்றனர் பளிச்சென்ற வெண்மைக்கு, இதுவும் மிக்க பாதிப்பை உண்டாக்கும்.

2.இந்த மாவு தயாரிக்கும் இயந்திர கிரைண்டர்கள் , ஒரு நாளைக்கு மிக அதிகபட்ச நேரம் இயக்கப்படுவதால், கிரைண்டர் கல்லின்,குழவியின் சிறு கருங்கல் துகள்கள் மாவில் கலந்து , மிக அதிகம் பேருக்கு சிறுநீரகக் கல் கோளாறுகளை உண்டாக்குகின்றன.

3.பொதுவான சுகாதாரம் மற்றும் வீட்டில் செய்யப்படும் அடிப்படை சுத்தம் மற்றும் நல்ல குடிதண்ணீர் ஆகியவை , கடை மாவு தயாரிப்பில் கடைபிடிக்கப்படாததால்,பல்வேறு அசீரணக் கோளாறுகளுக்கும் ,ஒவ்வாமை நோய்களுக்கும் ஊற்றுக்கண் ஆகிவிடுகின்றன, இந்த இன்ஸ்டண்ட் கடை இட்லி மாவுகள்!


4.வீட்டில் அரைக்கும் மாவில் , உடல் உஷ்ண பாதிப்பு மற்றும் வயிற்றுப்புண் போன்ற பாதிப்புகளுக்கு நல்ல இயற்கை  நிவாரணியாக வெந்தயம் சேர்ப்பார்கள், கடைகளில் அது போன்ற இயற்கை தானியங்கள் சேர்ப்பது இல்லை!

5. கடைகளில் கிரைண்டரில் குழவியை இணைக்கும் சங்கிலியை மாற்றிவிட்டு செயற்கை இரப்பரை உபயோகிப்பர், சத்தம் கேட்காமல் இருப்பதற்கும் மற்றும் மாவு தள்ளும் வேலையை குறைப்பதற்கும்,அதிக ஓட்டத்தினால் அடிக்கடி மாற்றவேண்டிய  இந்தப்பொருட்களை மாற்றாமல் உபயோகிப்பதால், அவற்றின் துகள்கள்  யாவும் மாவுக்குள் கலக்கின்றன.

6. ஈ கோலி [EColi] எனும் நாள்பட்ட பால்,தயிர்,முட்டை மாட்டிறைச்சிகளில் காணப்படும் மோசமான பாக்டீரியா, சுகாதாரமின்றி தயாரிக்கப்படும் இந்த மாவுகளில் அவை பரவி சிலருக்கு உடனடி பாதிப்புகளாகவும் சிலருக்கு ஸ்லோ பாய்சனாகவும் மாறிவிடுகின்றன.

   இப்படிப்பட்ட உணவு வகைகளை நம்மில் பலர், வீட்டில் அரைக்கும் மாவைவிட விலை மலிவாக இருப்பதாலும், அரைக்க வாய்ப்பு இல்லாததாலும் அடிக்கடி வாங்கிப் பயன்படுத்தி , உடல் நல சீர்கேட்டை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

மேலும், மணக்கும் மல்லிகைப்பூ இட்லி பிரியரா நீங்கள்?

ரோட்டோரம் எப்போதும் கூட்டம் அதிகம் காணப்படும் இட்லிக்கடைகளில் , இட்லிமாவுடன், பழைய சோற்றைக் கலந்து அரைத்து, சூப்பர் சுவை மல்லிப்பூ இட்லி! என விற்பனை செய்கின்றனர். 
நாட்பட்ட எந்த உணவுப் பொருளும் நிச்சயம் உடல் நல பாதிப்பையே ,உண்டுபண்ணும்!


குறைந்த விலையில் ஸ்லோ பாய்சன் !

உணருங்கள் உண்மைகளை! 

ஒதுக்குங்கள் ஆரோக்கிய சீர்கேட்டை, 
பரப்பும் பாக்கெட் மாவு கலாச்சாரத்தை!
                                       


                                                  2 comments :

 1. வணக்கம் கண்ணன்-ஜி ,
  நல்ல பதிவு! மாவு அறைச்சது எத்தனை நாள் பயன் படுத்தலாம்? மேலும், grinder இருந்தும் பலர் வீட்டில் கடையில் மாவு வாங்கி உபயோகித்து வருகிறார்கள். என்ன காரணத்தால் வயிறு கோளாறுகள் என்றே தெரியாமல் "வீடு சாப்பாடு" கூட பிரச்சனை கொடுக்கிறது என்று வருந்தும் என் தோழிகள் பலருக்கும் விவரமான அதிரடி தகவல்களை தந்துள்ளிர்கள்!
  நன்றி!!!!!!!!!!!
  Poorna

  ReplyDelete
 2. வணக்கம் பூர்ணா அவர்களே!
  தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி! மாவு கெடாத வரை பயன்படுத்தலாம், இதுபோன்ற வீட்டுச்சாப்பாட்டுப் பிரச்னைகள் மற்றவகை வீட்டு உணவுகளிலும் உள்ளன, இதைப்படித்து அதை சரி செய்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நாம் தோசை மாவை மட்டும் குறிப்பிட்டோம்.

  என்றும் அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete